சீனாவில் கனடிய நால்வருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!!
சீனாவில் இந்த ஆண்டு கனடாவைச் சேர்ந்த நான்கு பேருக்கு போதைப் பொருள் தொடர்பான குற்றங்களுக்காக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
கனடிய அதிகாரிகள் அதனை உறுதி செய்துள்ளனர்.
கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மெலானி ஜோலி, அந்த நால்வரும் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் என்றும் அவர்களின் அடையாளங்கள் வெளியிடப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மார்ச் மாதம் 20-ஆம் தேதி வியாழக்கிழமை அன்று சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் அந்த நான்கு பேரும் குற்றம் செய்ததற்கான சான்றுகள் உள்ளது என்றும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் விளக்கம் அளித்தது.
போதைப் பொருள் குற்றங்களை அது கடுமையான குற்றமாக கருதுகிறது.
இதனிடையே, “ சீன அதிகாரிகள் கனடிய குடிமக்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றியது மனிதத் தன்மையற்ற, அதிர்ச்சி அளிக்கும் செயல்.கனடா விழித்துக் கொள்ள வேண்டும் “என்று ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் கனடா’ அமைப்பைச் சேர்ந்த கெட்டி நிவ்யபந்தி தெரிவித்துள்ளார்.
கடந்த சில வருடங்களாகவே சீனா மற்றும் கனடா ஆகிய இரண்டு நாடுகளுக்கு இடையிலான உறவு கசிந்து வருவதால் சீனாவின் அண்மைய நடவடிக்கை அதை மேலும் மோசமாக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.